ஒருசமயம் திருமால் சாலிஹோத்ர மஹரிஷிக்கு பிரத்யக்ஷமாகி அருளினார். பெருமாள், தான் உறைவது 'எவ்வுள்' என்று கேட்க, மஹரிஷியின் பிரார்த்தித்தபடி இங்கு எழுந்தருளியதால் இந்த ஸ்தலம் 'திருஎவ்வுள்' என்ற பெயர் பெற்று பின்னர் 'திருவள்ளூர்' என்று மாறியது.
மூலவர் வீரராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கனகவல்லி என்னும் திருநாமம். சாலிஹோத்ர மஹரிஷி, பிரம்மா, சிவபெருமான் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
சாலிஹோத்ர மஹரிஷி பிரார்த்தித்தபடி, பெருமாள் இங்கு வருவோரின் சகல நோய்களையும் தீர்த்து வைப்பதாகவும், அவர்களுக்கு ஞானத்தை அருளுவதாகவும் கூறியபடியால், மூலவர் வைத்திய வீரராகவன் என்னும் திருநாமத்துடனும் தமது வலது திருக்கையை சாலிஹோத்ர மஹரிஷியின் தலையில் வைத்தபடியும், இடது திருக்கரத்தில் ஞான முத்திரையோடும் எழுந்தருளியுள்ளார்.
மதுகைடபர்களைக் கொன்று வேதியர்களையும், தாபஸர்களையும் ரக்ஷித்த ஸ்தலம். வடலூர் ராமலிங்க அடிகளார் தமது தீராத வயிற்றுவலியை நீக்கியதால் இத்தலத்து பெருமாள் மீது 'போற்றி பஞ்சகம்' பாடியுள்ளார்.
அமாவாசையன்று ஏராளமானோர் இங்குள்ள ஹிருத்தாபநாசினி புஷ்கரணியில் நீராடி தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|